பசி என்றால் என்ன என்று தெரியாமலே வளர்ந்துவிட்ட சந்தியா இப்போது ஒவ்வொரு கணமும் அந்த பசிக் கொடுமையினால் துடித்துக் கொண்டிருந்தாள்.
ஒருவேளை உணவை வயிறாற சாப்பிட்டே பல மாதங்களாய் ஆகிவிட்டது. அப்படி கிடைக்கும் ஒரு பிடி உணவை வாயிக்குள் வைக்கும்போதுகூட அவளால் உருசித்து சாப்பிட முடியவில்லை. பிள்ளைகளின் நினைப்பு. மற்றும் கணவன் உடல் சிதறி இரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டும், குமுறிப்போய் இறுதியில் இறுகிப் போய்விட்டிருந்த அவள் மனசு.
அவளின் மூத்த மகள் சரண்யா, இளையவன் செந்தூரன் இருவரினதும் கைகளையும் இறுக பற்றிக்கொண்டு இடம் பெயர்ந்தபோது சனநெருக்கலில் கைநழுவிப் போன அவர்களின் நிலை என்னவாயிற்று!
பெற்றவள் மனம் அடிக்கடி பிள்ளைகளை எண்ணி துடித்துக்கொண்டு காணும் இடமெல்லாம் அவள் பார்வை தன் செல்வங்களை தேடிக்கொண்டிருந்தது.
சந்தியாவின் இளைய மகன் செந்தூரன் நான்கே வயது நிரம்பிய பாலகன். கண்களில், செய்கையில் எப்போதுமே துடுக்குத்தனம்.
தாயின் சேலைத்துலைப்புக்குள் முகத்தை புதைக்கும் அவன் எங்கே எப்படி இருக்கிறானோ! ஒருவேளை உணவையேனும் சாப்பிட்டானோ! பசி தாங்க மாட்டானே! மூக்கைச் சீந்திக் கொண்டாள் சந்தியா.
அருகில் இருந்த ஒருவர் சொன்ன
"இளம் வயசு பெட்டையள விசாரணைக்கு எண்டு கூட்டிக்கொண்டு போயினமாம்" அவள் காதிலும் கேட்டது."
அதில்ல எண்ட மகளும் இருப்பாளோ கடவுளே இது என்ன சோதனை. விசாரணைக்கு எண்டு கூட்டிக்கொண்டு போய் எந்த வதை முகாமில்ல அடைச்சி சித்திரவதை செஞ்சு நாசமாக்க போகினமோ எண்ட செல்லத்தை. . ." அவள் புலம்பத் தொடங்கினாள்.அருகே இருந்த பெண்மணிதான் அவளுக்கு ஆறுதலாக அப்படியொன்றும் நடக்காது நீ தைரியமாயிறு மகள் பாதுகாப்பா இருப்பா எண்டு ஆறுதல் வார்த்தை சொல்லி சந்தியாவை தேற்றினாள்.
கடவுளே எண்ட குஞ்சுகளை திருப்பிக்கொடு என்று மனசுக்குள் கடவுளை மன்றாடி கொண்டிருந்தாள் சந்தியா.
அப்போது மழைத்துளி விழ ஆரம்பிக் கொண்டிருந்தது. அருகே இருந்த பேணி ஒன்றை எடுத்து அந்த மழைத்துளியை சேகரிக்க தொடங்கினாள் குடிப்பதற்காக.
அரைவாசி நிரம்பியவுடன் குடிப்பதற்காக ஆவலுடன் காத்திருந்த சமயம் ஓடோடி வந்த சிறுவன் அதை தட்டிவிட்டுச் சென்றான். சந்தியாவுக்கு கோபமாய் வந்தது. பெருமூச்சுடன் அடக்கிக் கொண்டாள்.
மீண்டும் முயற்சி செய்து நிரம்பிக் கொண்டிருந்த வேளை... மீண்டும் அதே சிறுவன் தட்டிவிட்டுச் சென்றான். கோபம் மிகுதியால் அவனுக்கு இரண்டு அடி போட்டாள்.
சிறுவன்
"ஆ.......". என்று அலறத் தொடங்கினாள். பின்னர் கடகட வென்று சிரிக்கத் தொடங்கினான்.சந்தியா சிறுவனை அணைத்தபடியே முகத்தை நோக்கினாள்.
திடுக்கிட்டுப் போனாள். அது என்னுடைய செந்தூரனா
! சிக்குப்பிடித்த தலைமயிராக எலும்பும் தோலுமாக கடவுளே. கட்டி அணைத்து மாறி மாறி கன்னத்தில் முத்தமிடுகிறாள்.என்னை அடையாளம் தெரிந்ததாக அவன் முகத்தில் எந்தவித சலனமும் இல்லை. ஏதோ சிரிக்கிறான். தனக்குள் கதைக்கிறான். மகன் கிடைத்த சந்தோசத்தில் மனம் ஊசலாடும் வேளையில் மனம் ஒருபுறம் குமுறி அழுகிறது.
No comments:
Post a Comment