Monday, November 5, 2012

தொலைபேசி தொல்லைபேசியான கதை

டெலிபோன் மணி இடைவிடாமல் அடிச்சுக்கொண்டே இருக்கின்றது. நல்ல நித்திரையிலிருந்த என்னை எழுப்பி விட்டது. டெலிபோனை எடுப்போமா  எண்டு யோசிச்சிககொண்டு நேரத்தை பார்க்கிறேன். நேரம் காலை 3.00 மணி. ஒருவேளை அம்மாதான் கொழும்பிலிருந்து அடிக்கிறாவா எண்டு நினைச்சுக் கொண்டு ஓடிப்போய் போனை எடுக்கிறேன். 
அம்மாதான் போனில்.
அம்மாவின் குரல் கேட்டதும் காலையில் பறவையினங்கள் ஒலி கேட்டால் எப்படி சந்தோசப்படுமோ அது மாதிரிதான் அம்மாவின் குரலைக்கேட்டதும் எனக்கும் சந்தோசம். கதைச்சு முடிந்தபின் மனசில ஒரு கவலை. அம்மாவின் மடியில் படுத்து ஒருமுறை பிரிஞ்சிருக்கிற துக்கத்தை நினைச்சு ஒருக்கா கண்ணீர் விட்டு அழனும் போலிருந்தது. அந்த நினைப்போடு அப்படியே தூங்கி விட்டேன்.

அதற்குள் திருப்பியும் டெலிபோன் மணி அடிச்சி எண்ட நித்திரையை குழப்பிட்டுது.  டெலிபோன் இப்படியா எண்ட நித்திரையை குழப்பவேணும் . கொஞ்சம் கோபமாகவே அலோ சொல்கிறேன்.
மறுமுனையில் இந்தியாவில் இருக்கிற என்னுடைய மாமா .
புதுசா ஒரு handphone வாங்கினேன்.வேலை செய்யுதா என்டு ஒருக்கா பார்க்கவேணும் என்றார். 
ஓ......அதுக்கென்ன மாமா .நீங்கள போனை வையுங்க ஒரு நிமிசத்தில் அடிக்கிறேன். நம்பரைத்தாங்கோ என்று நம்பரை வாங்கிக்கொண்டேன்.
என்ன செய்யிறது மாமாவாச்சே மாமாவுக்கு மகன் வேற இருக்கிறார். அடிக்காமல் இருக்கமுடியுமா . அவரோடும் கதைத்துவிட்டு திருப்பியும் சுருண்டு நித்திரையாகிட்டேன்.

திருப்பியும் மறுபடி டெலிபோன் மணி அடிச்சி எண்ட நித்திரைய குழப்பிட்டுது. 
அட கடவுளே இது என்ன திருப்பி எரிச்சலோடு நித்திரை மயக்கத்தில் அலொ என்கிறேன்.
மறுமுனையில் ஓர் உரத்த ஒலியில் 
ஹாலோ கறுப்பி இருக்கிறாவா? 
முன்பின் கேட்டிராத கரகரப்பான குரல் கேட்டவுடன் கொஞ்சம் பயந்துட்டேன்.
நீங்க யாருணு திருப்பி கேக்கிறேன்.
நான் தான் சாத்திரி என்கிறார்.
என்ன விசயம் என்று கேட்கத்தொடங்கியவுடனே எனக்கு ஏதும் வரண்தான் கொண்டு வந்திருக்கிறார் என்ற சந்தோசத்தில் கட்டிலில் ஏறி துள்ளிக் குதிக்கனும் போலிருந்தது.
ஆனால் அதற்குள் அவரே கறுப்பியின்ட போன் நம்பர் கிடைச்சிது . அதுதான் ஊருக்கு எடுத்த டெலிபோன் காட்டில் கொஞ்சம் கதைக்கலாம எண்டு சொல்லிச்சிது அதுதான் எடுத்தனான் எண்டு ஓர் இழுவல் கதை. அத்தோடு இணைப்பும் அறுந்து போச்சுது.
ஆ.........இது என்ன வம்பாப் போச்சே.. எண்ட சந்தோசமும் கூடவே போச்சுதே.

சாத்திரியின் நம்பரை டயரியின் பக்கங்களை   தேடி எடுத்து புரட்டி போன் பண்ணுகிறேன்.
ஹலோ என்கிறேன்.

மறுமுனையில் அதே கரகரத்த குரல் ஹலோ என்றவுடன் மெளனம்.

வீட்டில் ஒரு அம்மணியின் குரல் மட்டும் மெதுவாய் கேட்கிறது.

இப்ப எதுக்காக உந்த விடியக்காலத்துல லண்டனுக்கு போன் போட்டு கதைச்சிக்கொண்டு நிற்கிறியள். தெரிங்சவங்களோட போனில கதைக்கிறதுக்கே நேரமில்லை எண்டு சந்நதம் ஆடுறிங்கள்.  அதுக்குள்ள உந்த கறுப்பிக்கோ காப்பிலிக்கோ போனை போட்டுக்கொண்டு..............

ஆஆஆஆஆஆஆஆஆ.......இதுக்கும் மேலே கேட்டா எண்ட காதை வெடிச்சுடும் போனை அப்படியே சத்தமில்லாம வைச்சுட்டேன்.
அப்போதான் தெரிஞ்சது அங்கே மதுரை மீனாட்சி ஆட்சி நடக்குது எண்டு. அவர் வெளியில புலி. வீட்டில பூனை எண்டு.

இப்படியெல்லாம் தொல்லைபேசியின் தொல்லை அதிகம் 

காற்சட்டையின் நீளத்தின் அளவை குறைப்பது எப்படி?

தேவையான பொருட்கள் படத்தில் காட்டியவாறு எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

கால்சட்டையின் கால்பகுதியில் காணப்படும் பட்டித்துண்டை பிரித்து எடுத்து வையுங்கள்.
பிரித்த கால்சட்டையை கீழாகவும், அளவு கால்சட்டையை மேலாக வைத்து அயன் (iron) பண்ண வேண்டும்.
ஏற்கனவே மடிக்கப்பட்டிருந்த அளவை டேப்பால் அளந்து வைக்க வேண்டும்.
எடுத்த அளவை தைக்க வேண்டிய காற்சட்டை மடிப்பில் இருந்து அடையாளப்படுத்தி வெட்டி க் கொள்ளவும்.


அளவு காற்சட்டை அளவுக்கு காலை மடித்து, புறப்பக்கமாக முன்பு பிரித்து வைத்த பட்டித்துண்டை வைத்து ஊசிகளால் குத்தி வைக்க வேண்டும். பட்டித்துண்டை வைக்குப்போது அதன் நுனி காலின் அடிப்பகுதியில் சற்று தெரிந்தமாதிரி வைக்கவேண்டும். 
அதை பின்புறமாக திருப்பி பட்டித்துண்டின் இரு புறத்திலும் தைக்கவேண்டும். தைத்த பின் பார்த்தால் கால்சட்டையின் சரியான பக்கத்தில் தையல் ஒன்றும் தெரியாமல் இருக்க வேண்டும்.

கால்சட்டையின் காலின் அடிப்பகுதியையும் (விளிம்பை) மடித்து தைக்கவேண்டும் .

கால்சட்டையின் சரியான பக்கத்தில் தையல் ஒன்றும் தெரியாமல் இருக்கும் இந்த மடிப்பு கால்சட்டையுடன் இணைந்திருக்க இந்த தையல் தேவைப்படுகிறது.
அதன் விபரம் சிறு விளக்கத்துடன்.


இறுதியாக காற்சட்டையை அயன் செய்ய வேண்டும்.
நன்றி

Monday, October 29, 2012

நான் தாயாக......


தத்தி தளிர் நடை நடக்கையில் என்
தளிர் பாதம் நோகும் என்று என்னை
உள்ளங்கையில் தாங்கியவள் நீ அம்மா
கலங்கிய போதெல்லாம் என்னை நீ
அணைத்துக் கொண்டது உன் மார்பல்லவா
நான் துவண்டாலும் தோள் தந்து
நம்பிக்கை தந்தவளும் நீதானம்மா.
உன்னை உருக்கி
என்னை உருவாக்கிய அம்மா.
வயோதிப காலமதில்
நான் உனக்கு தாயாகும் நிலை
வேண்டும் வேண்டும் என்றே என் மனம்
துடிக்கின்ற துடிப்பின் நிஜங்கள்
நிழலாக மாறுகின்ற காலமதில்
மனம் மனதார வாழ்த்துகின்றது
நோய் நொடியின்றி நீ வாழ வேண்டுமம்மா.....

என் கனவு நனவாக அம்மா.... உன்
வயோதிப காலமதில்
நான் உனக்கு தாயாகும் நிலை வேண்டுமம்மா
21.03.2004

மறக்கலாமோ சொல் மனமே


மனம் என்றொன்று இருப்பதால்
ஞாபகங்கள் அங்கே சங்கமம்

வெள்ளையாய் உடை கண்டால்
பள்ளி சென்ற தோழிகளுடன்
அள்ளிச் சென்ற புத்தகங்களுக்குள்
சுமந்து சென்ற ஞாபகங்கள்.....

பட்டாடையுடுத்தி பட்டாம் புூச்சியாய்
வட்டமடிக்கும் திருவிழாக் காலமதில்
கடலை வாங்கி உண்ட
கடந்து போன ஞாபகங்கள்.....

மண் மணக்கும் மழைத்துளிகளினுடே
மனை நோக்கி வருகையில்
அன்னையவளின் தாளித்த சமையலில்
வாசனையாய் போன ஞாபகங்கள்.....

வயதுக்கு வந்த போது
புதுப்புது மாற்றங்களுடே.. முதன் முதலாய்
புதுச் சேலையின் தழுவலில்
அனுபவமாகிப் போன ஞாபகங்கள்....

பருவ வயதில் பருவமான போதே
உருவமாய் உள்ளத்தில் உறைந்துபோன
முதற்காதலின் ஸ்பரிசங்கள்
ரணங்களாகிப்போன ஞாபகங்கள்.....

நடுநிசியில் கடந்து போன ஞாபகங்கள்
மீண்டும் என் நினைவில்.. அவற்றை
மறக்கலாமோ சொல் மனமே….!
25.03.2004

மனிதனாவது எப்போது...? ? ?


அர்த்தங்களின் சந்தையில் முகவரியை
தொலைத்து, அந்நிய நாட்டில் அகதியாய்
தஞ்சமாய் வந்துறங்கியபோதே எனை
நோக்கிட்ட வினா எந்த நாட்டவர் என்று
நளினமாய் கேட்டிட, நானும்
சிறீலங்கன் என்று நயமாய் பகிர்ந்திட
அன்று ஆரம்பித்த பதிவுகள்தாம்
இன்றுவரை தொடர்கிறது தொடர்கதையாய்...

இருமணம் கலந்த திருமணப் பதிவில்
இனிய மழலைகளின் பெயர் பதிவில்
வேலை தேடும் படலங்களில்
அந்நியரோடு அந்நியமாய் அஞ்சாமல்
அன்போடு உறவாட நினைக்கும்போது
தொடர்கிறது நான் ஒரு சிறீலங்கனாய்....

இந்தநாட்டு பிரஜா உரிமைக்காக
அந்தநாட்டு பிரஜா உரிமையை
இழந்தபோதும் தொடர்கிறது
நான் ஒரு சிறீலங்கனாக..
போகும் இடம் தன்னிலும் வருமிடம் தன்னிலும்
தொடர்கிறது என்றென்றும் தொடர்கதையாய்...

நான் ஒர் அந்நியனாய் அகதியாய்
சிறீலங்கனாய் வேண்டாம்
புலத்தில் நிறபேதமில்லாத மனிதனாக
மதித்திடும் காலம் தான் எப்போ வரும்

காதல் நட்பாகுமா...!


நெஞ்சில் கொண்ட காதல் நிஜங்களாய்
வஞ்சகமாய் வார்த்தைகளாய் ஒருவருடமென்ன
பஞ்சமாய் பறந்திடும் பத்து வருடங்கள் என்றே
மஞ்சத்துக்காக காத்திருப்பதிலும் ஒர் சுகம் என்றே…

பழகிய காதல் பாலாய் புளித்துப் போக
பழையன கழிதலும் புதியன புகுதலுமாய்
மனம் தாண்டிய பதிவிரதனாய் மாறிட
பசுமை தேடி தாவியதோ மனம்

காதல் போயின் சாதல் மறைந்து போய்
காதல் போயின் நட்பு என்றுரைத்தே
காதலுக்கு ஒர் வரைவிலக்கணம் சூட்டிட்ட
காதல் மன்னன் அவன்

தொடர்ந்த காதல் நட்பாகியது கண்டே
தோற்றுப்போன காதலுக்காக நட்புதனையும்
துறந்திடத் துடித்த பேதை அவள்
என்றும் என்றென்றும் என் தோழிதான்

ஒரு வார்த்தை சொல்வாயா...


முதல்பார்வையில் மலர்ந்த காதலினால்
மோகனராகத்திலும் ஓர் மௌனராகமாய்
இதயத்திற்குள் இதயராகமாய்
இசைமீட்டுகின்ற உன் நினைவலைகள்

உன் செவ் இதழ் புன்னகைக்குள்
உறைந்து போகின்ற என் மூச்சுக் காற்றே
என் காதல் தேவதையே..! ஒருமுறையேனும்
உன் மூச்சால் சுவாசம் கொடுக்க மாட்டாயோ

பின்னிய நீண்ட கருங்கூந்தலுக்குள்
பின்னிவிட்ட என் மனதின் ஏக்கம் தீர
மீண்டும் காதல் பார்வையினை ஒருமுறையேனும்
கன்னியவள் என்னை பார்த்திட மாட்டாயோ

உயிர் என உன்னை நிதம் நினைத்து
உன்னை என்னுள் சிறைவைத்து
நிஜமாய் என்றும் என்னுடன் நீயிருக்க
நிழலாய் உனக்குள் என்னை புதைத்துக்கொண்டு
சிலிர்த்த என் கனவுகளுக்குள் மிதந்தே
புல்லரித்துப் போகின்ற என் ரோமங்களை
அமைதியாய் அடங்கிட.. ஒருமுறை ஒரேஒருமுறை
அன்பாய் காதலிக்கிறேன் என்று ஒரு வார்த்தை
சொல்வாயா... என் செல்லமே..

விடியல்..


கண்வழி புகுந்து காதல்மொழி பேசி
கண்ணே கண்மணி கற்கண்டே என்றே
காதோரம் கவிபல சொல்லி சொல்லியே
கவிழ்த்துவிட்ட கள்வன்

உதடுகள் தினம் உன்பெயர் சொல்ல
உன் நினைவுகள் என் மனதை வருட
நெஞ்சம் முழுவதும் நீ நிறைந்திருக்க
நித்திரையிலும் மீட்டெடுத்தேன் உன்னை

பூப்போன்ற மனதை பொக்கிஷமாய்
பூப்போல் வைத்திருப்பேன் என்றும்
முள்ளாய் நானிருந்து மலரே உன்னை
முழுவதுமாய் காத்திடுவேன் என்றான்

தொடர்ந்த காதல் படந்தது
ஊடலாய் கூடலாய் ஊர்ந்தன
எட்டு மாதங்கள் கடந்தபின்னும் நீ
எட்டத்திலும் நீ எட்டவில்லை

இரவுநேர ஒத்திகைக்கு பின்னே
இருள் சூழ்ந்தது என் வாழ்க்கையில்
விடியல் இல்லை ஒரு
விடியலும் இல்லை

ஆகாய நுதலில் ஆனந்தமுத்தம்

user posted image


கண்களை இமைகள் வருடியபோது
கருமணிக்குள் உன் உருவம் பதிந்து
கண்களின் பார்வையாக நீ என்னுடனே
கலந்துவிட்டாய் என்பதை உணர்ந்தேன்

உதடுகளை நாக்கு வருடிக்கொண்டபோது
உதட்டில் பதிந்திட்ட உன் முத்திரை
உள்ளமெங்கும் உவகை பொங்கிட இதழ்
உரசி உதிர்த்த இலக்கண வார்த்தை அது

கைகளை மெல்லென வருடிக்கொண்டபோது
இணைந்த எம் கரங்களின் ஈரமான வியர்வை
இன்னும் பசை நீங்காத விரல் இடுக்களில்
உன் கை விரல்கள் பதிந்தபடி

தலையினை வருடியபோதே நீ
சிந்திய கண்ணீர்த்துளிகள் என் தோள்களை
நனைத்தச் சென்றபோது கலங்கிய என் கண்களின்
கண்ணீர்துளிகள் கன்னங்களில் கோலங்களாய்

முன் நெற்றியை வருடியபோதே உணர்ந்தேன்
ஆகாய நுதலில் ஆனந்தமாய் முத்தமிட்ட
அந்தப் பொழுதுகள் தந்த ஆனந்தம்

முத்தத்தில் தொடங்கி மோகத்தில்
சத்தமில்லாமல் என்னுள் சங்கமித்து
ஆகாய நுதலில் ஆனந்தமாய் முத்தமிட்ட
அந்தக் கணப்பொழுதுகள் என்றும் நினைவில்
ஆனந்த ராகமாய்...

எனக்குள்ளும் ஆசைதான்...


பின் தூங்கி முன் எழும் உனக்காக...
உனக்கு முன்பாக வேலையால் வந்தே
உன் கஷ்டம் நினைந்து நான் உருகி
என் கஷ்டம் பஞ்சாய் பறந்தே போனதே…

உனக்காய் சங்கடமான சமையல் செய்தே
உனக்காய் வழிமேல் காத்திருந்தேன் வாசல்வரை
வந்தாய் நீயும் களைத்தே வந்த களை தீர ஆசையுடன்
தந்தேன் என் அன்பை அன்புக்காணிக்கையாய்....

உறைப்பு அதிகமாகிவிட்ட உப்பில்லா
சமையல்தனை கண்ணீர் சிந்தி சிந்தியே
முறைப்பில்லாமல் சிரித்தமுகத்துடன்
சாப்பாட்டில் உப்பை சமன் செய்து
சாப்பிடும் கொள்ளை அழகுதனை என்னென்று
சொல்வேன சகியே வார்த்தையில்லை

சுவைத்தபடியே ஆஹா சமையல் பிரமாதம்
உரைத்தே உள்ளத்து உணர்வுகள் தனை
ஆசையாய் அன்பாய் காட்டிய போதே…
ஆசைதான் என்னுள்ளும் ஆரவாரத்துடன்
வேலைதனை விட்டு விட்டு உனக்காக
வீட்டுக்கணவனாக இருந்துவிடலாமோ என்றுதான்..

கைத்தொலைபேசிகள்


கைக்குள் அடங்கிவிட்ட கைத்தொலைபேசி
வைப்பதற்கு இடமில்லை என்றுதானோ
கைகளுக்குள் கைதாகிப் போய் விட்ட நவீனமான
கைத் தொலைபேசிகள் பலவித வடிவங்களில்

நிமிடத்துக்கு ஒருதரம் நித்தமாய்
நேர காலமின்றி சிணுங்கிக் கொள்கின்ற சிணுங்கள்கள்
அழகிய மெலோடிகளாக தென்றலோடு கலந்து வந்து
பாலமாய் இணைத்து வைக்கின்ற சங்கமங்கள்

இக்கட்டான நிலையிலும் கரம் கொடுக்கின்ற
இங்கிதமான கைத்தொலைபேசிகள்
அங்கிருந்து இங்குமாய், இங்கிருந்து அங்குமாய்
அடிக்கடி வருகின்ற அழைப்புக்கள்

உற்றார் உறவினர் வெளிநாடு என்றும்
முகம் அறியா முகவரி அறியா மனிதர்களிடையே
மணிக்கணக்கில் உரையாடுகின்ற பொழுதுகளுக்குள்
தன்னிலை மறந்து சரணாகதியாகிப்போய்விட்ட நிலை

உறவாய் உதவியாய் வந்த தொலைபேசிகள்
உறவாடி களிக்கும் நிலையிலும் வீட்டில்
உறவுகளோடு அமர்நது உரையாடுவதற்கு
உள்ளமதில் நேரமில்லையாகிப்போன நிஜங்கள்

அறுபடும் வேரும் அந்நியமாகும் உறவுகளும்

user posted image


புலம் பெயர்ந்தது வந்ததால் நெஞ்சில்
ஓயாமல் ஓலமிடும் சொல்லோன்னா ஏக்கங்கள்
உறவுளை விட்டுப் பிரிந்துவந்த துயர்கள்
அறுபட்டுப் போன வேராக அகதி வாழ்வில்
அடியெடுத்து வைத்த கதையின் ஆரம்பங்கள்

நிலா வெளிச்சத்தில் கூடி மகிழ்ந்த பொழுதுகள்
கோயில் குளம் என்று கூடி மகிழ்ந்த நினைவுகள்
உற்றார் உறவினருடன் கூடி மகிழ்ந்துண்ட பொழுதுகள்
ஆழம் விழுதாய் ஆறுதலாய் கூடி இருந்த உறவுகள்
அறுந்த உறவுகளாக புலத்தினில்

தமிழன் இல்லாத நாடும் இல்லை
தமிழனுக்கு என்று ஒரு நாடுமில்லாமல்
எட்டுத்திசையெங்கும் சிதறி வாழும் எம் இனம்
அறுபட்ட வேறாய் அங்கும் இங்குமாய்
அந்நியமாகிப்போன உறவுகளாய் ஆகிவிட்ட நிலை

அறுபட்ட வேர்கள் மீண்டும் படர்ந்திடும் உறவாய்
எப்போ எங்கே இணைந்த சமுதாயமாய் மலர்ந்திடுமா
அந்நியமாகிப்போன உறவுகள் மீண்டும் ஒன்றிணைந்த
தமிழீழத்தில் மீண்டும் துளிர்த்திடுமோ

சிரிச்சி சிரிச்சி வந்தார்...


சாந்தமான பார்வையுடனே

சிரிச்சி சிரிச்சி வந்த சின்னப்பு
சிங்காரமாய் நெஷனல் உடுத்தியே
சைக்கிள் மிதிச்ச காலாலே இப்போ
பென்ஸ் கார் காஸ் யை மிதிச்சி மிதிச்சி
பத்து கிலோ மீட்டர் தூரத்தையும்
பவிசாக மின்னல் வேகத்தில் கடந்து
களம் நோக்கி வருகிறார் எங்கள் அப்பு

அறுபது கருத்தென்ன ஆழமான
ஆறாயிரம் கருத்துக்கள் என்ன
வாயெல்லாம் பற்கள் தெரிய அழகாய்
டுத்பேஸ்ட்டுக்கு விளம்பரம் தந்தது போல்
சிரிச்சி சிரிச்சி வாழ்த்துக்கள் கூறுவது
கடவுள் தந்த வரமோ என்றெண்ணியே
சின்னப்புக்கும் இனிதே வாழ்த்துக்கள்

*** குடிச்ச வாயாலே இங்கே
ரெமி மார்டின் என்றும் ஸ்கொட்ச் என்றும் மப்பில்
வாய்க்கு ருசி சிப்சும் கச்சானுமாய் தேடுறார்
பிலாவில குடிச்ச கூழும் மறந்து போய்
கரண்டி கத்தியுடன் சண்டை பிடித்தே
பிட்சா என்றும் இறைச்சி பொறியலுமாய் ஒரு
வெட்டு வெட்டியே உள்ளே தள்ளுறார்

பழசு தான் புதுசு என்ற நினைப்புடன்
இளமை ஊஞ்சலாடுது என்றே
கறுப்புக் கண்ணாடியுடனும் சேட் பொத்தானை
திறந்து விட்டுக் கொண்டும் ஒரு பவுணில்
தோடுடைய செவியனாய் வலம் வந்தே
த்ரிஷாவுடன் ஆடும் நடத்துற லூட்டி
அப்பப்பா கொஞ்சநஞ்சமல்ல

சின்னாச்சிக்கு விஷயத்தை போட்டுக்கொடுக்க
நானும் சின்னாச்சியின் வீட்டுக் கதவைத்தட்ட
பாதி த்ரிஷாவும் பாதி சின்னாச்சிமாய்
மேக்கப் கலைந்தும் கலையாமல் வந்து நின்ற
சின்னாச்சியை பார்த்தே சிலையாய் சமைந்து போனேன்

பகுதிநேர வேலை...


உனக்காக ஒரு கவிதை எழுதக் கேட்ட போது
உன்னை நினைத்து என்ன எழுதுவது புரியாமலே
உன் பெயரினை எழுதித் தந்த போது அதை
உள்ளன்போடு எற்று பத்திரப்படுத்தினாய்

பாதி உடைந்த வளையல் துண்டுகளை
பாதையோரம் எறிந்த போது அதனையும் எடுத்து
பக்குவமாய் ஒன்றுவிடாமல் தேடி தேடியே
ஆசையாய் பத்திரப்படுத்திக் கொண்டாய்

கூந்தலில் இருந்து விழுந்த மலரினையும் எடுத்து
சூடிய மலரில் வாசம் அதிகம் என்றெண்ணி
ஆவி அதனுள் அடக்கம் என்று அதையும்
தாவும் மனதுடன் பத்திரப்படுத்தினாய்

உன்னை எண்ணி என்ன சொல்வது
மணிக்கணக்கில் நாள்தோறும்
என்னுடன் பழகிக்கொண்டே ஊமையாய்
பகுதிநேர வேலையாக குப்பை பொறுக்கும்
வேலைக்குள் தள்ளப்பட்டிருப்பதை நினைத்தால்
வேதனை ஆகத்தான் இருக்கின்றது

Sunday, October 28, 2012

இதயத்தைத் தொட்ட காதல்...


கொழும்பில் உன்னை நேருக்கு நேராக பார்த்தேனோ... அன்று கண்களில் தொடங்கிய காதல் இதயத்தை தொட்டு, தொட்டு சென்றதை இன்னும் மறக்கத்தான் முடியுமா...?

விடுமுறைக்காக லண்டன் நாட்டிலிருந்து வந்தபோது தான் என் கண்களை கைது செய்தாய். காதல் தேசம் அதில் அகதியாய் இருப்பதாய் கூறி, என் சம்மதம் கேட்டு... என் விழி வாசல் தேடி நீ கேட்டபோது என் மௌனங்கள் சம்மதங்களாக தந்தபோது என்னையே உன்னுள் தொலைத்து நின்றேன்.

உன் தோள் அளவு வளர்ந்திருந்த முடி, ஒற்றைக்காதில் நீ அணிந்தருந்த அந்த ஒற்றை கடுக்கன், வெய்யிலின் கொடுமையை தகிப்பதற்காக அணிந்திருந்த அந்த கருப்புக் கண்ணாடியில் உண்மையில் என் கண்களுக்கு நீ மன்மதனாகத்தான் இருந்தாய்.

என் மனதில் சலனமே இல்லாமல் நானும் என் வேலையுமாக இருந்த வேளையில்தான் சுள்ளானாக வந்து என் மனதை சுண்டி இழுத்து காதல் சுகமானது என்பதை எனக்குள் ஏற்படுத்திவிட்டாய்.

ஆட்டோகிராப் நினைவுகளாக புகைப்படங்களை எடுத்துக் கொண்டு என்னை லண்டன் அழைப்பதாய் கூறி, நீயும் லண்டன் பறந்தாய்.

காதல் பிரிவின் வேதனை அன்று உணர்ந்தேன். உன் புகைப்படம் பார்த்து, உன்னுடன் தொலைபேசியில் கதைத்து, என் வேதனை தீர நீ மருந்தாய் இருந்தாய். சில மாதங்களின் பின்னே லண்டன் நோக்கிய என் பயணம் ஆரம்பமாகியது.

விமானநிலையத்தில் உன்னைக்கண்டபோது... கொழும்பில் பார்த்தமாதிரியே நீ இருந்தாய். ஆனால் நான் தான் மெலிந்து விட்டேன் என்றாய். உன்னை பிரியாத வரம் வேண்டும் என்றே கோயில் கோயிலாக ஏறி ஏறி சாமிக்கு அர்ச்சனை செய்து வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்தேன் என்றேன். நீயும் தலையை அழகாக சிலிர்த்து விட்டு "ஆஹா எல்லாம் இறைவன் தந்த வரம்" என்று தலை அசைத்தபோது என் உடம்பில் மின்சார அலைகள் ஊற்றெடுத்தன.

வீடு வந்த போது, வீட்டை வைத்திருக்கும் அழகைக் கண்டு அதிசயித்துவிட்டேன்.

ஆஹா எத்தணை அழகு. வைக்கவேண்டிய பொருட்களையெல்லாம் என்ன லாவகமாக அடுக்கி வைத்திருக்கும் ஓவ்வொன்றையும் பார்த்தேன் ரசித்தேன்.

மெய்மறந்து நின்றதில் சிறது நேரம் உன்னைக் காணமால் துடித்து அறையேங்கும் தேடினேன். உன்னைக் காணவில்லையே என்ற ஏக்கத்துடன் நின்றபோதுதான் அங்கே மேசைமீது இருந்த டோபை க் கண்டு துடித்துப்போனேன். ஆ... என்ன இது இதைக் கண்டு மயங்கிவிட்டேனா... என் துடிப்பு அடங்குவதற்குள் நீயும் என்முன்னே வந்தாய் மொட்டையாக... காதல் கிறுக்கனே... திருட்டு ராஸ்கல்... என்னை ஏமாற்றி விட்டாயே... என்று நாலுவார்த்தை வாய்க்கு வந்தபடி பேச வார்த்தைகளைத் தான் தேடிக் கொண்டு இருந்தேன்.

ஆனால்... சொல்லத் துடித்த வார்த்தைகள் வர மறுத்தன. காதல் கண்களில் தோன்றி இதயத்தைத் தொட்ட காதலாயிற்றே... இந்த டோப் முடியை விட இந்த மொட்டை தான் உனக்கு ஜோர் என்று கூறி என் மனதைக் கவர்ந்த அந்த டோபாவை எடுத்து குப்பைத்தொட்டிக்குள் எறிந்தேன்

தொப்புள் கொடி உறவொன்று...


அன்று அதிகாலை வேளை கண்கள் மூடியபடியே இருக்க நினைவுகளை அசைபோட்டுக் கொண்டே, படுக்கையில் புரண்டு படுத்துக் கொண்டிருக்கிறேன். நித்திரைக்கும் நினைவுகளுக்கும் இடையே நடைபெறும் போராட்டம். அதில் நினைவுகள் வெற்றி பெற்றுக்கொள்ள, நித்திரை மெல்லலென விடைபெற்றுக் கொண்டிருந்தது. இன்று எனக்கு பதினெட்டாவது வயது. என் மனம் ஏனோ என் அம்மாவை நினைத்துக் கொண்டு ஏங்கியது.

என் சின்ன சின்ன தேவைகள், என் அன்பை முழுவதுமாக கொட்டிக்கொள்ள... அம்மா என்னுடன் இருந்திருந்தால், எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்ன செய்வது. ம்... அன்று செய்ய வேண்டிய கடமைகள் ஒவ்வொன்றையும் மனதினுள் எடைபோட்டுக் கொண்டிருந்தேன். அப்போது அறைக்குள் வந்த அப்பா

"இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களம்மா..." என்றபடியே முத்தம் தந்து விட்டு, "எப்போதும் போல நீ நல்லா சுகமா இருக்கோனும்..." என்று வாழ்த்தி விட்டுப் போகின்றார்.

நானும் எழும்பி, காலைக் கடமைகள செய்ய முற்படுகிறேன். அனைத்தையும் முடித்துவிட்டு, அம்மாவின் படத்துக்கு விளக்கேற்றி, மலர்கள் தூவி வணங்கியபடியே... இன்றுதான் முதன்முதலாக அம்மாவின் படத்தைப் பார்ப்பது போல் வைத்த கண்வாங்காமல் மெய்மறந்து பார்த்துக் கொண்டே இருக்கின்றேன்.

ம்... என் நினைவு முழுவதும் அம்மாதான். எல்லோரும் சொல்வது போல் நான் அம்மா மாதிரிதான் இருக்கிறன். என்னைப்பார்த்தால் அம்மாவை பார்க்கத் தேவையில்லை என்பது போல் உருவ ஒற்றுமை அப்படி கச்சிதமாக இருந்தது. உறவினர் நண்பர்கள் பலர் கூறியிருக்கிறார்கள் "நீ அசல் அம்மா மாதிரியே உரிச்சி வைச்சி பிறந்திருக்கிற..." என்று சொல்லும் போது, ஆனால் நான்தான் அம்மா தான் என்னைப்போல் இருக்கிறா” என்று சிறுவயதில் விளையாட்டாக சொன்னவற்றையே இப்போதும் சொல்லிக் கொண்டே இருந்திருக்கிறேன்.

இன்றுதான் முதன் முதலாக "ம்.... அம்மா வைப்போலத்தான் நான் இருக்கிறேன்" என்று முழுமனதாக ஏற்றுக் கொள்கிறேன். அம்மாவை நினைக்கும் போது என் உடம்பில் என்னையறியாமல் ஒர் புது உணர்வு ஊடுருவுவது போல் உணர்ந்து கொள்ள, என் கண்கள் பனிக்கத் தொடங்குகின்றன. அம்மாவின் நினைப்பு இதயம் முழுவதும் உந்தி எழ... கண்ணீர் பொழ பொழ வென வழியத் தொடங்குகிறது.

"அம்மா அம்மா... எனக்கு அம்மா வேண்டும்..."

"என்னம்மா பிறந்த நாள் அதுவுமாக ஏன் இப்படி" என்று அப்பா அன்பாக கூறியபோது, என்னால் அழுகையை நிறுத்தவே முடியவில்லை. "அப்பா..." என்றபடியே மீண்டும் அழுத்தொடங்குகிறேன். மனதிலுள்ள பாரம் இறங்குமட்டும் அழட்டும் என்று அப்பாவும் சில கணங்கள் மௌனமாகவே இருக்கின்றார்.

"அப்பா நான் அம்மாவின் கல்லறையைப் பார்க்கோணும். அந்தக் கல்லறையை நான் தொட்டுக் கும்பிட வேண்டும் என்னுடைய அம்மா வாழ்ந்த பூமியை நான் ஒருக்கா பார்க்கோணும் எனக்கு அம்மா வேண்டும்" என்றேன் வழக்கமாக அழுதபடியே...

இப்படி நான் கூறுவது ஒன்றும் புதிது இல்லை... ஆனால் அப்பா நெடுக இதைத்தான் சொல்வார்

"அகிலா, எனக்கும் உன்னைக்கூட்டிக்கொண்டு ஊருக்கு ஒருக்கா போய் வரவேண்டும் என்ற ஆசை நிறையவே இருக்கம்மா ஆனால்... போற இடத்துல ஆமிக்காரங்கள் எனக்கோ உனக்கோ ஏதும் செய்து போட்டால் என்டால் அதை என்னால் நினைச்சு பார்க்க முடியாதும்மா. எப்பபார்த்தாலும் ஆமியிண்ட கெடுபிடிதான் அதிகமா இருக்கும்.." அப்பா வழமையாக ஒப்புவிப்பவை இவை.

ஆனால்... இன்று வழமைக்கு மாறாக "பிள்ள அகிலா இந்தமுறை மாவீரர் வாரத்தில்ல நாம் ஊரில்ல நிற்கிறோம். இது பிராமிஸ்(ப்ரொமிசெ). இப்போ சந்தோசம் தானே..?"

என்று கூறிய போது எனக்கு எவ்வளவு சந்தோசமா இருக்குத் தெரியுமே. வானத்தில பறக்கிற மாதிரி அப்படி ஒரு உணர்வு. என்ட நண்பிகள் எல்லாம் தமிழீழத்தைப்பற்றிச் சொல்லேக்க எனக்கு சரியான கவலையாய் இருக்கும். ஆனா இப்ப எனக்கிருக்கிற சந்தோசத்தில்ல என்ன செய்யுறதென்டு தெரியல..

அம்மாவை சின்னவயசுல பார்த்தது எனக்கு பெரிசா நினைப்பில்லை. எனக்கு எல்லாமே என் அப்பாதான். அம்மா சயனைட் குப்பிகளுக்குள் தன்னை ஆட்படுத்திக் கொண்டு, மாவீரர் ராக மரணித்து கல்லறைகளுக்குள் துயின்ற போது, எனக்கு வயது மூன்றாக இருந்தது. என் அப்பா என்னை அழைத்துக் கொண்டு, தன்னந் தனியனாய் என் வாழ்வு சிறப்பாக அமையும் நோக்குடன் லண்டன் நாட்டுக்கு அகதி அந்தஸ்து தேடி வந்தார்.

அன்றிலிருந்து அவர் எனக்காகவே வாழ்ந்து வருகின்றார். அடிக்கடி சொல்லிக் கொள்வார். "எப்பாடு பட்டாவது உவள நல்லா படிப்பிச்சு போடனும். நல்ல ஒருத்தனிட்ட இவளை ஒப்படைக்க வேண்டும்"என்பார்.

இதைவிட அப்பா லண்டலில் நடைபெறும் ஒவ்வொரு மாவீரர்தின நிகழ்வுகளுக்கும் என்னை அழைத்துச் செல்வது, தன்னால் ஆன உதவிகளையும், பங்களிப்புக்களையும் செய்யத் தவறுவதே இல்லை. அப்படித்தான் ஒருநாள் என்னை மாவீரர் நிகழ்வுக்கு அழைத்துக் கொண்டு சென்ற சமயம், அங்கு ஒலிக்கும் பாடல்களை கேட்டுக் கொண்டிருந்த சமயம்...

அந்த பாடலில் வந்த வரிகள்

படலையில் தினம் காத்திருப்பேன் 
பள்ளி சென்று நீ திரும்பும் வரை 
சுடலைக்கு உன்னை அனுப்புவேனோ 
சோதனை ஏனனை ராசாவே 
பகைவர் குண்டுகள் நெஞ்சினிலே நெஞ்சினிலே 
சுமக்கும் உன்வீரம் வரலாறு ஆனதே 
என் மனதை சற்றே கலங்க வைக்கின்றது. 

"அப்பா, இந்தப் பாடலையெல்லாம் கேட்கும் போது... மனசுக்குள்ள ஏதோ ஒரு உணர்வு... சோகம்... வலி... என்ன என்று சொல்லத் தெரியல எனக்கு அழவேண்டும் போல இருக்கு. ஏன் எங்கட நாட்டில இப்படி... சாவதை நினைத்தால்... எனக்கு கவலையா இருக்கு அப்பா..." என்றேன்.

அப்போது அப்பா மிகத் தெளிவாக

"அகிலா மாவீரர்கள் ஒருபோதும் மரணிப்பதில்லையம்மா. அவர்கள் வாழ்ந்த மண்ணிலே விழுதாகி வேர் விடுகிறார்கள். அவர்கள் காற்றில் கலந்து எம் சுவாசத்தில் வாழ்கிறார்கள்..." என்று கூறியதை அடிக்கடி என் நினைவில் நிலை நிறுத்திப் பார்த்து இருக்கிறேன்.

இம்முறை தமிழீழத்தில் இதன் நிகழ்வுகளை நேரில் காணப்போவதோடு, என் அம்மாவின் கல்லறையை காணப் போகிறோம் என்ற மகிழ்வே என்னிடம் அதிகமாக இருந்தது.

தமிழீழ மண்ணில் காலடி வைத்தபோது, எமக்கு கிடைத்த வரவேற்பு கண்டு உடம்பெங்கும் ஒர் இனம்புரியாத உணர்வு ஊடுருவதை அறிந்து கொள்கிறேன். அது இன்பத்தின் பிரதிபலிப்பா...? அல்லது அது என்ன...? என்று என்னால் தெரிந்து கொள்ளமுடியவில்லை. பாதைகளில் பாதம் படப்பட எனது சின்னவயதின் காலத்துக்குள் புகுந்துவிட்ட நினைப்புடன், வீடுகள் ஒவ்வொன்றையும் என் கண்கள் தடவிய படியே வந்தன.

நான் சிறுவயதில் ஒடியாடி, விளையாடிய இடம், வீடு எல்லாவற்றையும் அப்பா காட்டினார். என் அம்மா வாழ்ந்த இடமும் அதுதான். அம்மாவின் கைகளை பற்றியபடி இந்த வீதியெல்லாம் சுற்றி, சுற்றி வந்திருக்கிறேனே. மீண்டும் ஒருமுறை என் ஆசை அம்மாவின் கைகளை இருக பிடித்துக் கொண்டு இந்த பாதையை... ஏன் இந்த உலகத்தை சுற்றிக்கொண்டு வர மாட்டேனே... என்ற ஏக்கம் பெருமூச்சாக வெளிப்படுகிறது.

வீட்டிலிருந்த என் பெரியம்மா, பெரியப்பா எல்லோரும் எங்களை அணைத்து தங்கள் அன்பைத் தெரிவித்துக்கொண்டார்கள். பெரியம்மா என்னை உற்றுப் பார்த்துவிட்டுச் சொன்னா

"அசல் அம்மா வை வார்த்து எடுத்த மாதிரி அப்படியே இருக்கிறாள்.." என்றாள்.

நாம் வருதை தெரிந்து கொண்ட பல உறவினர்கள் பலர் வீட்டிற்கு வந்து சுகம் விசாரிக்கத் தொடங்கிவிட்டார்கள். அதில் இருந்த ஒரு பெரியவர்

"உவள் சந்தியாவின்ட பெட்டையே. நான் அவள்தான் வந்து நிக்கிறோளோ.. என்டு நினைச்சுப்போட்டன். ம்... அவள் தான் மாவீரரா போயிட்டாள்." என்று சொல்ல அதற்கு மற்றவர் "சந்தியாவின்ட பெட்டைதான் உவள். அசல் கொம்மாவைப்போலவே தானே இருக்கிறாள்..." என்று சொல்ல,

"இன்னும் ஒருவர் "இண்டைக்கு காலத்தால உந்த காகம் விடாம கத்திக் கொண்டு இருந்த போதே நினைச்சனான். யாரோ வரப்போயினம் என்டு..."

சாய்மனைக் கதிரையில் அமர்ந்திருந்த வயதான ஆச்சி "கடவுளான உந்த பிள்ள சந்தியா இருக்குமட்டும் எனக்கு கரைச்சல் இல்லை உந்த கிணத்துல்ல தண்ணி அள்ளி தாரது எல்லாம் உவள் தான்..." என்றும்

இப்படி எத்தனையோ உரையாடல்கள்.

அம்மாவைப்போல் நானிருக்கிறேன் என்று எல்லோரும் கூறியதில் எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. அப்பாவின் முகத்திலும் என்றுமில்லாத மகிழ்ச்சிக்களை... அன்று இரவு முழுவதும் வீட்டு முற்றத்தில் அமர்ந்த படியே உரையாடி, சாப்பிட்டது எல்லாம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

அந்நிய நாட்டில், அந்நியமாகிப்போய், அன்னியனுக்கு அகப்பட்ட வாழ்க்கையில் அகதியாய் வாழ்ந்த வாழ்க்கைக்கும், உறவினரோடு உறவினராய் அளாவலாவி வாழ்கின்ற வாழ்க்கைக்கும் நிறைய வித்தியாசமும், எல்லாம் மறக்கமுடியாத நினைவுகளாயும் இருந்தது.

அம்மாவின் இளமைக்காலம், படிப்பு, அம்மாவின் குறும்புத்தனங்கள், இலட்சியங்கள் எல்லாம் மணிக்கணக்காக அதை உறவினர்கள் சொல்ல... சொல்ல... எனக்குள் அம்மா உயர்ந்து கொண்டே நின்றாள். அம்மா உனக்கு நான் மகளாக பிறந்தது அது நான் செய்த புண்ணியம்.

அன்று இரவு முழுவதும் என் நினைவில் அம்மாவைப்பற்றிய நினைவுகளே... வலம் வந்து கொண்டே இருந்தன. அடுத்த நாள் நானும் அப்பாவும், உறவினர்களும் அம்மாவின் கல்லறைக்குச் செல்ல ஆயத்தமாகிக் கொண்டு, அங்கு சென்று அடைந்தோம்.

நெருப்பாய் கனலும் நெஞ்சத்துடன், பொங்கி நுரைத்துக் கரையுடைத்துப் பாய்ந்து கொண்டிருக்கும் போராட்ட நதிவேகம் எனக்குள் மெல்லென தொற்றிக்கொள்ள ஆரம்பித்தக் கொண்டிருந்தது.

அடுத்தகணமே அத்தனையையும் சாந்தமாக்கி, விழிநீர் பூக்கவைக்கும் இயல்பிற்குறியவர்களாக அங்குறங்கும் மாவீரர்கள் கல்லறைகள் அமைந்திருந்தது.

அங்கே... என் அம்மாவின் கல்லறையில் விளக்கேற்றி, தொட்டு வணங்கியபோது... என் கண்கள் பனிக்கத் தொடங்கன. அம்மாவைக் கட்டிக்கொண்டு அழுவது போல், அம்மாவின் கல்லறையை கட்டிக் கொண்டு ஓ... வென அம்மா, அம்மா... என்று அழ வேண்டும் போல் ஒர் துடிப்பு... வேகம்... எனக்குள் அடக்கிக் கொண்டேன். அப்பா கூறியது இப்போதும் என் நினைவில் எதிரொலித்தபடியே... எனக்குள் புது தைரியத்தைத் தந்து கொண்டிருந்தது.

"அகிலா மாவீரர்கள் ஒருபோதும் மரணிப்பதில்லையம்மா. அவர்கள் வாழ்ந்த மண்ணிலே விழுதாகி வேர் விடுகிறார்கள். அவர்கள் காற்றில் கலந்து எம் சுவாசத்தில் வாழ்கிறார்கள்"

அப்பாவின் பார்வை என்மீது விழுகின்றது. எங்கே... நான் அழுதுவிடுவேனோ... என்று ஆனால் என்னைப்பார்த்து அப்பா ஆச்சரியப்படுகின்றார்.

எல்லோரும் என்னை அம்மா மாதிரி என்று சொல்றார்களே... அப்படிப்பட்ட எனக்கு மட்டும் ஏன் அம்மாவின் நெஞ்சினில் நிலை நிருத்திப்போன லட்சியம், நாட்டுப்பற்று போன்ற உணர்வுகள் இல்லாமல் போய்விட்டது. அம்மாவின் தொப்புக்கொடி உறவாய் பிறந்த எனக்குள் அவை எங்கே ஒளிந்து போனது...? என்று என்னையே கேட்டுக் கொள்கிறேன்.

கண்ணீரால் வெறும் வார்த்தைகளால் அழிந்து விட முடியாத துயரம் ஒன்று நெஞ்சுக்குள் தீயாகியது. கல்லறையில், வைக்கப்பட்ட தீப ஒளியில், என் இதயத்துள்ளும் ஒரு தீச் சுவாலை ஒன்று பிரவாகமெடுத்து, சங்கமித்துக் கொண்டிருந்தது.

உள்ளத்தின் வெள்ளமது நதிபோல அசைந்து, என்னிதயத்தின் ஓரத்தில் உறங்கிக் கிடந்த என் மனப்பறவையது விழித்துக் கொண்டு இசைக்கின்றது என் மண் ! என் மக்கள் ! என் மொழி !

என்றோ ஒர் நாள் எம் இனத்தின் எல்லா துன்பமும் தொலைந்து போய், அங்கே அத்தனை அடிமைத்தனமும் முடிந்து போன வாழ்விருக்கும். அதுவரை என் வாழ்வின் போராட்டமும் தொடர்ந்தபடியே... தொப்புள் கொடி உறவாய்.... பரிணமிக்கப்போகின்றது.

(யாவும் கற்பனை)

நிஜங்களையும் தாண்டி...

அதிகாலை நான்கு மணியாகிவிட்டது. எழும்ப மனம் இல்லாமல் படுத்துக்கொண்டே இருந்தாள் சந்தியா. உடம்பு முழுவதும் ஒரே அசதியாய் இருந்தது அவளுக்கு. படுத்தபடியே ஒவ்வொன்றாக நினைத்துப்பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஊரின் நினைப்புக்கள் அவள் கண்முன்னே நிழற்படங்களாக விரிந்து கொண்டிருந்தது. அவள் ஓடியாடி விளையாடி மகிழ்ந்த ஊர் இப்படி நிலைகுலைந்து போய் இருந்ததை தொலைக்காட்சியில் கண்டபோது துடித்துப்போனாள். அந்த மண்ணை அள்ளி தன் கண்ணில் ஒற்றிக்கொள்ள வேண்டும் போன்றதோர் துடிப்பு அவளுள் எற்படுத்தியிருந்தது.

சுனாமி ஏற்படுத்திவிட்ட தாக்கம் அவள் மனதையும் தாக்கிவிட்டுப் இருந்தது. சுனாமியால் அகதியாகிவிட்ட உறவினர்களின் நிலை, தாய் தந்தையரை இழந்த தன் ஒன்றுவிட்ட அண்ணாவின் மகன் செந்தூரனின் வாழ்க்கை, அவனை எப்பாடு பட்டாவது இந்த நாட்டுக்கு அழைத்துவிட வேண்டும் என்ற ஆவலில் செய்யும் ஆயத்தங்கள், இதற்கும் மேலாக மாதந்த கட்டணத்துக்காக வந்திருக்கும் பில்லுகள்... எல்லாவற்றையும் எண்ணிப்பார்த்தபோது அவளுக்குள் இருந்த அசதி ஒடி மறைய இயந்திரமாகிவிட்ட வாழ்க்கையை எண்ணியபடியே எப்படியும் எழும்பத்தான் வேண்டும் என்ற நிர்பந்தத்தில் எழுந்திருந்தாள்.

முகத்தை கழுவி விட்டு மதிய உணவுக்கான உணவை தயாரித்துக் கொள்வதில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டே தேனீரையும் ஊற்றிக் குடித்தாள். அதையும் முடித்துவிட்டு சலவை இயந்திரத்திற்குள் உடுப்புகளையும் போட்டு விட்டு நேரத்தைப் பார்த்தாள்

மணி ஆறை எட்டி பிடித்துக் கொண்டிருந்தது.

பிள்ளைகளுக்கும் கணவருக்கும் உரிய காலை உணவையும் அவர்களுக்குறிய பெட்டியில் வைத்துவிட்டு பிள்ளைகளை எழுப்ப அறைக்குச் சென்றாள்.

பொய்த் தூக்கமில்லாத வயது தங்களை மறந்து ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். அந்த காலைவேளையில் அவர்களை எழுப்ப அவளுக்கு கொஞ்சமும விருப்பம் இல்லை. ஆனால்... கட்டாயம் எழுப்பித்தான் ஆக வேண்டும் வேலைக்குப்போக வேண்டும் என்ற நிலைமை.

"சகானா… மோகனா... எழும்புங்கோ எழும்புங்கோ ஸ்கூலுக்குப் போக வேண்டும் நேரமாச்சு எழும்புங்கோ..." அவசரமும் அவதியுமாக எழுப்புகின்றாள்..

அவளின் அவசரம் தெரியாமல் "ம்... இன்னும் கொஞ்சநேரம் படுக்கப் போறன் அம்மா" சிணுங்கிக்கொண்டு திரும்பிப் படுக்க முயலும் அவர்களை வலுக்கட்டாயமாக எழுப்புகின்றாள்.

அழுது கொண்டு எழும் அவர்களையும் சமாதானப்படுத்தி முகம் கழுவ பண்ணி போட்டு, கையோடு அவர்களையும் பாடசாலைக்கு போக ஆயத்தம் செய்கின்றாள்.

அவையளின் அலுவல்கள் எல்லாவற்றையும் பார்த்தபின் அவளின் வசதிக்காக அவர்களை சிறிது நேரம் தொலைகாட்சி பார்க்க போட்டு விடுகின்றாள். அந்த சிறிய நேரத்துக்குள் அவள் வெளிக்கிட்டு எழுமணிக்குள் வேலைக்குப் போகவேண்டும்.

வெளிக்கிட்டுவிட்டு கணவரிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டு… பிள்ளைகளிடமும் விடைபெற்றுக் கொள்ள வந்தபோது கதிரையிலே மோகனா நித்திரையாகி விட்டிருந்தாள். இருவரையும் முத்தமிட்டு விடைபெற்றுக் கொள்ள போகும்போது வழமையாக சகானா கேட்கும் கேள்வி "அம்மா எங்களை நீங்களே ஸ்கூலுக்கு கூட்டிக்கொண்டு போங்கோ..." கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுதாள்.

அவளை அன்புடன் அணைத்துக் கொண்டே "இல்லையம்மா அம்மா வேலைக்கு போக வேண்டும்தானே. ஸ்கூல் முடிய நானே நின்று கூட்டிக்கொண்டு வருவன்தானே வரேக்க சொக்கிலேட்டும் வாங்கிக் கொண்டு வாறன் என்ன" என்று சமாதானம் கூறிவிட்டு இறுக அணைத்து முத்தங்களையும் தந்துவிட்டு வேலைக்குப் போய் விட்டாள் சந்தியா.


அவளின் கணவர் மகேசன் வேலைக்குப் போகும் போது பிள்ளைகளையும் அப்படியே பாடசாலையில் விட்டுவிட்டுப் போவார். சந்தியாவின் வேலை முடிய பிள்ளைகளின் பாடசாலை முடியவும் சரியாகயிருக்கும். அப்படியே அவர்களையும் வீட்டுக்கு கூட்டிக் கொண்டு வருவாள்.

பிள்ளைகள் பாடசாலை நேரத்தில்தான் அவளின் வேலைநேரம் அமைந்திருந்தது. இப்படி ஒரு வேலை கிடைத்தது நினைத்து தனது அதிர்ஷ்டம் என்று எண்ணி அவள் அடிக்கடி தனக்குள் பெருமைபட்டுக் கொள்வாள்.

இப்படித்தான் அவள் வாழ்க்கை நித்தமும் சென்று கொண்டிருந்தது.

ஆனால்... சுனாமியின் அழிவுக்குப் பிறகு அவளின் வாழ்க்கையில் சிறு மாற்றம் கண்டு கொள்ள ஆரம்பித்தது. சுனாமியால் அகதியாகிவிட்ட உறவுகளின் மேலதிக பண தேவைக்காக... மேலதிகமாக இரண்டு மூன்று மணித்தியால பகுதிநேர வேலைக்காக அவளின் தேடல் அமைந்து இருந்தது.

அதன் பலன் மாலை நேரங்களில் மூன்று மணிநேர பகுதி வேலை அவளுக்கு கிடைத்தது.

மத்தியாண வேலை முடிந்து வந்த கையுடனே பிள்ளைகளையும் கூட்டிவந்து அவர்களின் அலுவல்களையும் பார்த்து விட்டு, சிறிது நேர ஓய்வுக்குப்பின் மீண்டும் பிள்ளைகளை பக்கத்து வீட்டு நண்பியிடம் விட்டு விட்டு மீண்டும் வேலைக்கு போவதில் சந்தியாவின் ஆர்வம் அதிகமாக இருந்தது.

அவள் உழைத்த பணம் முழுவதும் சுனாமியால் அநாதையாய் அகதியாக்கப்பட்ட குடும்பங்களுக்காகவும் குழந்தைகளுக்காகவும் செலவு செய்து கொண்டிருந்தாள்.

கணவனின் பணம் குடும்பத்துக்காகவும், அவளின் உழைப்பு தாயகத்துக்காகவும் செலவிடப்பட்டுக் கொண்டிருந்தது.

அன்றும் வழக்கம் போல் பாடசாலை முடிந்து பிள்ளைகளை வீட்டுக்கு கூட்டிக்கொண்டு வந்தபோது... சாகானா தான் கேட்டாள்

"அம்மா... நானும் இங்கே சுனாமியால் அநாதரவாய் மாதிரிதானம்மா இருக்கிறன். இந்தாம்மா இந்த உண்டியல் பணத்தை நீங்களே வைத்துக்கொண்டு எங்களுடன் இருங்கள் அம்மா..." என்றாள்.

ஒருகணம் செய்வதறியாது திகைத்து நின்றாள் சந்தியா

மகள் சாகானாவின் பேச்சுத் தொனி... அவள் கொண்டு வந்த உண்டியலின் பணம் அவள் மனதின் திகைப்பும் கேள்விக்குறியுமாக அமைந்து விட சாகானாவையும் உண்டியலையும மாறி மாறி பார்த்துக் கொண்டு நின்றாள்.

"எங்கேயிருந்தம்மா இந்த பணம்.." சந்தியா அன்பாக வினாவினாள்.

"நான் தான் ஸ்கூல்ல சொன்னனான். எங்கட சொந்தக்காரர் கணபேருக்கு வீடில்ல என்டனான். அவையளாத்தான் வகுப்பு பிள்ளைகள் எல்லாம் சேர்த்து தந்திச்சினம்" என்றவள் அழுதபடியே "அம்மா எப்போதும் நீங்களும் அப்பாவும் வேலை வேலை என்டு இருக்கிறீங்கள். எங்களுடனும் இன்று இருங்கோ." என்டு விம்மி விம்மி அழத் தொடங்கி விட்டாள்.

கூடவே வயதில் சிறியவளான மோகனாவும் அதைப்பார்த்து விக்கி விக்கி அழத் தொடங்கிவிட்டாள்.

ஒருகணம் சந்தியா ஆடிப்போய் விட்டாள். சுனாமி என்ற பேரலை எங்கள் நாட்டை மட்டுமா தாக்கி விட்டுப்போனது...? இல்லை இல்லை அதன் தாக்கம் புலம் பெயர் நாட்டினில் மெல்லிய மறைமுகமாக தாக்கம் ஏற்படுத்தியிருப்பதை முதன் முதலாக உணர்வுப்பூர்வமாக புரிந்து கொள்ள ஆரம்பித்தாள். வேலை, பணம், பிள்ளைகளுக்கு விரும்புவதை நினைத்தவுடன் வாங்கித்தருவது இது இல்லை வாழ்க்கை. பொம்மையும் பள்ளிக்கூடமும் சொல்லக் கொடுத்தவற்றை மனப்பாடம் செய்யும் கள்ளமில்லா வயதில் அன்புக்காக ஏங்கும் அந்த பிஞ்சு உள்ளங்களை தவிக்க விட்டு விட்டேனே..?

வெங்காயத் தோலிகளைப் போல ஒன்றன் மேல் ஒன்றாக வந்து விழும் உறைகளாக... வந்து குவியும் சுமைகளுக்கு நடுவில் இளம் பச்சைக்குருத்துக்களுக்கு அன்பு என்ற அரவணைப்பை கொடுக்க தவறியது பெற்றோர்களாகிய தங்கள் பிழை என்பதை அவள் மெதுவாக உணரத் தொடங்கி... தன் வாழ்வியல் முறையினை மாற்ற மனத்திடமாக முடிவுசெய்து கொண்டாள்.

சுனாமி நடந்தது நிஜம். அந்த நிஜங்களைத் தாண்டி... இந்த புலம்பெயர்ந்த மண்ணில் வேலை வேலை என்று நாமும் அதில் முழ்கி எம் சிறுவர்களையும் அநாதரவான நிலைக்கு தள்ளத்தான் வேண்டுமா...!

தன்னை சுதாகரித்துக் கொண்டவள் "என்ட செல்லக்குஞ்சுகளே" வார்த்தைகள் வர மறுக்க முதன் முறையாக முத்தங்களை பொழிவது போன்ற உணர்வுகள் மேலிட... இருவரையும் மாறி மாறி இருக அணைத்துக் கொண்டு கண்களில் கண்ணீர் வடிய முத்தங்களைப் பொழிந்தாள்.

ஓவ்வொருவரின் வாழ்க்கையிலும் என்னதான் அமைதியாக, ஆனந்தமாக இருப்பது போல் தோன்றினாலும்... மேலே சலசலத்தோடுவது போல் தோன்றும் ஆழநீர்ப்பரப்பின் அடிமட்டத்தில் பாறைகளைப் பிளந்து மண்ணை அறுத்துச்செல்லும் வேகம் இருக்குமே... அது போன்ற ஒரு வேகம்... குறையாக கறையாக பரிணமிக்கத்தான் செய்கின்றது. அந்த வேகமே கண்களை மறைக்கின்ற கறுப்பு கண்ணடிகளாகவும், மூகமுடிகளாகவும் அமைந்துவிடவும் செய்கின்றது.

(யாவும் கற்பனை )


கண்ணீர் அஞ்சலிகள்


நா கொண்டு நாடு நாடாய் போராடி அடி
நாதமாய் தமிழீழத்தின் ராஜகுருவாய்
மதியுரைஞராய் பிரகாசித்தவேளையில்
பிரிவுத் துயரம்
இடியாய் செவியில் விழுந்த சேதி
இதயத்தை துடிக்க வைக்கின்றதே

விடுதலைக் கனலை இதயத்தில்
விருப்புடன் சுமந்து இறுதிவரை
விடாது ஒயாது உழைத்து
விடுதலைக்கு உயிர்மூச்சாய் நின்று
நோயுடல் வாட்டும்போதும்
நிமிர்ந்தே நின்று உழைத்த
உத்தம வீரர் அவர்

தலைவரின் அருகில் நின்று
தலைவரின் பக்கபலமாய் வலதுகையாய்
தலைமை தாங்கி நின்று
தேசத்தின் விடுதலைக்கு குரல் தந்த
பாலா அண்ணாவின் ஆத்மா
சாந்தியடைய கண்ணீர் அஞ்சலிகள்
14.12.2006

மறக்குமா நெஞ்சம் மறக்குமா


வஞ்சனை எண்ணத்துடன் சிறீலங்கா
இராணுவத்தினர் வக்கணையாய்
வீசிய எறிகணைத் தாக்குதலில்
வசமாய் மாய்ந்தார்களே எம் உறவுகள்
மறக்குமா நெஞ்சம் மறக்குமா

தஞ்சம் என்றே வாகரை பாடசாலையிலே
புகுந்திருந்த வேளையில்
உயிர் துறந்த எம் உறவுகளை
படுகாயம் அடைந்த உறவுகளை
நினைக்கையில் உயிர் உள்ளவரை
மறக்கத்தான் முடியுமா நெஞ்சே

அப்பாவி தமிழ் மக்களின் உயிர்
அநியாயமாய் பறிபோவதை எண்ணியும்
அத்தியாவசிய பொருட்கள் இன்றி
மக்கள் படும் அவதிகளை எண்ணிடும்
வேளையில் மனம் படும் வேதனைகளை
நினைக்கையில் நெஞ்சம் தான் மறக்குமா

10.11.2006

மரணஓலம் கேட்கிறதா... ? ? ?


வான்வெளியில் பாய்ந்து வந்த இரும்புப்பறவைகளால்
கண் மூடித்திறக்கும் நிமிடத்துளிகளுக்குள்
எம் தேசத்து பள்ளி சிறார்களின்
உதிரமெல்லாம் உறைந்து போனதே

வானம் பார்த்து விழிமூடிக் கிடக்கும்
செஞ்சோலையில் எங்கள் பிஞ்சுகளின்
செங்குருதி குடித்த இரும்புப் பறவைகளே
முல்லையின் மரண ஓலம் உங்களுக்கு கேட்கிறதா.. ?

பாயிலே படுக்க வைத்து பெற்றோரும்
மற்றோரும் கதறியழ பார்த்த கண்களும் கலங்கி
னத்த நெஞ்சுடைக்கும் கதறி அழும் ஓலத்தில்
மனங்களும் விழிசிந்தி வலிகளை வலிமையாக்கி
வலிகளை செலவு செய்ய முன் வருவோமா... ?

செங்குருதி குடித்த இரும்புப் பறவைகளே
முல்லையின் மரண ஓலம் உங்களுக்கு கேட்கிறதா.. ?

30.10.2006

என்னாவாயிருந்தால் பிடிக்கும்


பால் மணம் மாற பச்சிளம்
பத்து மாதக் குழந்தையாய்
தத்தித் தவழ்ந்து நடை பயின்று
உண்ண மறுத்து அன்னத்தில் அலைந்தும்
என்ன என்று சொல்லத் தெரியாமல்
கணப்பொழுதும் அழுது வடியும்
வயதினில் என்னை உனக்கு பிடிக்குமா ?

கள்ளம் கபடம் இல்லாமல் ஓடியாடும் வயதினில்
பள்ளிப் பருவத்தினில் பாடங்களில் அதிக
புள்ளிகளை எடுத்து சித்தி எய்திட்டபோது
அள்ளி அணைத்திட்ட எல்லையில்லா
பள்ளிப்பருவம் தான் உனக்கு பிடிக்குமா ?

பருவம் எய்திய போது என் உடலின்
உருவ மாறுதலைக் கண்டே என்னை
கண்காணித்து காத்திருப்புக்களுடன்
கனவுகள் பல சுமந்து இருக்கும்
வயதில் இருக்கும் என்னை பிடிக்குமா ?

அம்மா நான் என்னவாயிருந்தால் பிடிக்கும்
சும்மா சொல்லம்மா...
சின்னவளாக இருந்தபோது
பெரியவளானால் நல்லது என்றாயே...
பெரியவளான பின்னே...
சின்னவளாயிருந்தால் நல்லாயிருக்கும் என்றாயே

21.10.2006

காற்றே காற்றே


காற்றே வீசுகின்ற இதமான பூங்காற்றே
காற்றே தென்றலாய் தவழ்ந்து வந்து
இதயத்தை வருடுகின்றாய்
காற்றே மலர்களிலும் இலைகளிலும்
தடவி வாசம் தனை பரப்புகின்றாய்
காற்றே பசுமையாய் நிகழ்வுகளை
அசை போட வைக்கின்றாய்
காற்றே நெருப்பாய் உயிர் பெற்று
இதயத்தை கலங்க வைக்கின்றாய்
காற்றே உன் ஓட்டம் நின்றுவிட்டால்
உடலும் வெற்று உடல்தானே
காற்றே புயலாக வந்து மரம் வீடு
அனைத்தையும் சாய்க்கின்றாயே

கால்கள் இன்றியே புயலாக மாறும்  காற்றே
நீரை கயிறாகத்திரித்து அலையாக சூறாவளியாக
கடல் ஒரத்து பட்டு மணல் மீதினிலே
பல உயிர்களை கொன்று குவித்தாயே

காற்றுக்கும் உருவமில்லை
கடவுளுக்கும் உருவமில்லை
காற்றே காற்றே உன்னையும்
கடவுளாய் கண்மூடி வணங்கினால்
இயற்கை அழிவுதான் போய் விடுமா

11.10.2006

ஆடி வரும் வேளையிலே...


கொடி இடை அவளின் துடிஇடை அழகும் விழி
மூடித் திறக்கும் அவளின் பட்டுச் சிறகு இமைகள்
சூடிக் கொண்ட மலர் படுக்கைகளின் 
நெடி மூக்கைத் துளைத்து எடுக்க
வடித்த சிலையின் மறு உருவமோ என்ற அழகு
கோடி கொட்டிக் கொடுத்தாலும் இணையாகுமா
அடிமனதின் ஆசைகள் ஆழமாய் பதிந்ததே

ஆடிக்குப் பின் ஆவணி என்பதுபோல்
தாடிக்குப்பின் தாவணி என்றே கறுப்புத்
தாடியுடன் தவமிருக்கும் தவக்கோலமுடன்
லேடி அவளின் நினைப்புக்கள் நித்தமும் மலர
மாடி வீட்டு முற்றத்தினில் தோகைமயில்
தோடி ராகத்துடன் பாடிய பாடல் கேட்டும்
படி இறங்கவில்லை பைந்தமிழ் பாவை அவள்

நொடிக்கு நூறுதடவை அவளை நோக்கியும்
அடியேனை நோக்கவில்லை நோக்கியா கையிலிருந்தும்
வாடி என் செல்லமே என்று சொல் ; லி ஒரு எஸ்.எம்.எஸ்
வடிக்காமலே வாழ்வினிலே ஒன்று கூடி
ஜோடி சேர்ந்து வாழ நினைத்தேன்
பொடி வைத்துப் பேசவில்லை பழகவில்லை
போடி என்று சொல்லவும் மனசில்லை மனதினில்
படிந்த உருவம் தேடி வந்த உறவாய் என்றும்
ஆடி வரும் தென்றலில் இதமாய் தாலாட்டாய்
ஆடி வரும் வேளையில் ஊஞ்சலாய் அவள் நினைவுகள்

30.07.2006

மௌனங்கள் வேண்டாம்


சொல்லத் துடித்த வார்த்தைகள்
சொல்லாமல் போய்விட்ட மௌனங்கள்
சிந்திக்கத் தவறிவிட்ட சிந்தனைத்துளிகள்
சிதைந்து விட்ட வாழ்வின் நிகழ்வுகள்

மரணிக்க வைத்திட்ட நினைப்புக்கள்
மயங்கிய வாழ்வினுள் அகப்பட்டு
தூக்கினுள் தழுவிக்கொண்டபோது
நாக்கு மட்டும் வெளியே தள்ளியபடியே
நலிந்து போன இதயத்தின் மௌனங்கள்
வார்த்தைகளை மரணிக்கச் செய்ததே

மௌனங்கள் வேண்டாம் மனமே
மனதின் வார்த்தைகள் தனை மொழிந்து
மௌனத்தினை கலைத்திடு மனமே

30.06..2006

வேலையை கோட்டை விட்டேன்


இதயம் தொலைத்து என்நிலை மறந்து
இதயம் தனில் உன்னையே நிருத்தி
இமைக்கும் பொழுதிலும் உன் நினைவாய்
இங்கிதமாய் இனித்திடும உரசும் பொழுதுகளில்
எனக்குள் உருவாகிடும் இன்னொரு உயிர் நீதான்

அன்னநடையாய் சிங்காரமாய் அடியெடுத்துவைக்கும்
பட்டுத்தளிர் மேனி அவள் பாதமோ செந்தாமரை
அவள் இடுப்பினில் படபடக்கும் விழி நொடிப்பினில்
அலைமோதும் தேனுண்ணும் வண்டாய்
அவள் பின்னல் முடிப்பினில் என் மனம்
அலையாய் ; பின்னலோடு பின்னித்தான் போனதே

பால்வண்ணம் அவள் முகம் அதில்
செவ் இதழ் பரப்பிய செம்பவள உதடுகள்
செவ்வனே ஒருமுறை ஒரே ஒருமுறை
நோட்டம்விட்டதால் வந்த வேலை மறந்து
வேலையையும் கோட்டைவிட்டேன்

29.06.2006

வெளிச்சம் வெளியில

ஆதவனின் எச்சம் வெளிச்சமாய் அந்த
வெளிச்சத்தின் நெருப்பின் எச்சம் மிச்சமாய்
வெண்ணுடலில் பட்டுத் தெறிக்க
வெக்கை... எங்கும் ஒரே வெக்கையாய்
வியர்வைத்துளிகள் பூத்ததுவே...

அழிவிற்கும் உறுதுணையாய்
ஆக்கத்திற்கும் உறுதுணையாய்
இருள் அகற்றும் வெளிச்சமாய்
இந்த பிரளயம் எங்குமே வியாபித்திருக்கும்
இருள் அகற்றும் விளக்காய் சூரியன்

தினம் தினம் வெளிச்சம் வெளியிலே
மனதின் வெளிச்சம் மனசுக்குள்ளே
பாருக்குள்ளே நல்ல மனங்களின் தரிசனங்கள்
மனதின் முகத்தினில் வெளிச்சங்களாய்

22.06.2006

வெற்றி ஆண்டாய் மலர

கடந்து சென்ற நாட்கள் அவை ஏற்படுத்திய
வலிகளின் தாக்கம் சென்றதாக இருக்கட்டும்
இதுவரை வந்து சேர்ந்த இன்பங்கள் என்றும்
தொடர்கதையாய் தொடரட்டும்

வீறு கொண்டு எழும் எம் தமிழ் இனத்தின்
விடியலை விரைவினில் தா
விடியலுக்காய் வித்தாக விழும் எங்கள் உடன்
பிறப்பின் கனவுகளை நனவாக்க வா

வெற்றி ஆண்டாக மலர்க மலர்க
இரண்டாயிரத்து ஆறாம் ஆண்டே மலர்க
வெற்றி ஆண்டாக மலர்க....
 01.01.2006

வானும் கனல் சொரியும்-தரை மண்ணும் கனல் எழுப்பும்


அலையடிக்கும் கடலும் அதில் தாவும் எம் கரும்புலியும்
வானில் பறக்கும் வான்புலியும் மதிமயக்கும் உயிர்குடிக்கும்
தறுதலையாய் தரணியிலே அவமான சின்னமாய் சிங்களவனுக்கு
குடைபிடிக்கும் ஓநாய்க்கூட்டம் அதன் கதிகலங்க என்சேனை

சிங்களச்சேனை கதிகலங்கும் அவர்தம் அங்கம் சிதறும்
தறுதலையாய் தரணியிலே அவமான சின்னமாய் சிங்களவனுக்கு
குடைபிடிக்கும் ஓநாய்க்கூட்டம் அதன் கதிகலங்க என்சேனை

அசையா எம் தலைவன் தலைமையில் அணிவகுக்கும்
ஆயிரம் ஆயிரம் விடுதலை வேங்கைகள் எமக்காய் உருகும்
செங்களமாடும் புலிச்சேனை காற்றில் கந்தகம் கலக்கும்
இடம் எல்லாம் கரும்புலியின் தியாகவேள்வியின் உயிர்
உருகும் உருகும் அந்த மானிடத் தெய்வங்கள் திவ்வியமாய்

எம் இதயத்தில் நிறுத்தியே அலயும் சிங்களப் பேய்களுக்கும்
தாயை விட உயர்ந்த எம் தரணிக்காய் போராடும் என் சேனை
மனிதர்கள் பாதம் பணிவேன் சீறும் எம் புலிகள் கணைகள்
திக்கெட்டும் முழங்கட்டும் சுற்றிவரும் பகைவன் உயிர்
குடிக்கட்டும் கலங்கும் தமிழா மனதில் உறுதியின் உறைவிடமாய்

தூங்கும் அந்த மாமனிதர்கள் எமக்காய் போனார்கள்
அவர்க்காய் நாம் என்ன செய்தோம்
இல்லை அவர் விட்டு சென்ற பாதையில் பயணிப்பதே
எம் பொறுப்பு பாதை காட்ட தலைவன் நடக்க பின்னால்
தமிழ் இனம் என்றும் அணிவகுக்கும் அலைஅலையாய்

வீரம் விளைந்த மண்ணின் விடுதலை வித்துக்கள்

என் தாய் என் மூச்சும் கலந்தது என் தாய் நாடு
என் வாழ்வின் ஆணிவேராய் என் சுவடுகள்
நிறைந்த அந்த வேரின்வழியே அந்நியன் ஆதிக்கவெறி
நுழைவதும் அதனூடே அவன் என் தாய் மண்பறிப்பும்

காணச்சகியாமல் தன்னலம் கருதாத் தலைவன்
புறப்பட்டான் செங்களமாட செஞ்சேனைக்கூட்டமென
அணிவகுத்தன மறவர் படைகள் ஆயுதமேந்தி
அலையலையாய் வான்புலியாய் கரும்புலியாய்

செங்களமாடும் எம் வீரர் தம் வேகுதியில் சிதறும்
சிங்கள சேனை அடங்கும் வேளை அருகினில்
ஆர்ப்பரிக்கும் ஆணவசெருக்கும் ஆதிக்கவெறியும்
ஆயுதம் தரித்த சிங்கள காடையர் தம் கால்
பிடிக்கும் காலிக்கூட்டமும் காணாமல் போகும்

என் வீரம் செறிந்த மண்ணின் வித்துக்கள்
விளையும் பூமி இது யாரும் வீணாகிப்
போனதில்லை அவர் தம்வீரமும் இணை
இல்லா தியாகமும் அழிவதில்லை அவர்
தம் மண்ணும் வீரம் சொரியும் பூமி

அகிலமெல்லாம் பொங்கிடும் - தமிழுக்கு அவர்தானே உயிர் கொடுத்தார்

அன்னை தமிழின் அழகை உலகம் எல்லாம் சேர்த்தார்
அழகானஎம் தமிழில் ஒர் நாட்டை தமிழீழம் அமைத்தார்
உயிரான எம் தமிழ் உலகம் பரந்த்து பட்டொளி வீச

தமிழர் இல்லம் அமைத்தார் எங்கள் தானைத்தலவன்
அவர் வழிகாட்டலில் தரணி எங்கும் பொங்கும் தமிழ்
மெல்ல இனி சாகும் தமிழ் என்று உரைத்தவர்கள்
எம்புலம் பெயர் மழலைகள் தமிழ் கேட்டால் நாணுவர்

எம் மக்கள் மாக்கள் அல்ல அவர் மானிடம் பேணும்
மேலான எம் மனிதர்கள் சகிப்பில் உயர்தவர்கள்
தமிழ் போல் வரும் வார்த்தைகளை ஏற்கும்
உயர்வான குணக்குன்றுகள் என்றும் தலை வணங்கா

இனிய அழகிய தமிழ் போல் காலம் எல்லாம் கரையாது
உயர்வாய் அழகாய் எம் தமிழ் வாழ எம் உறவுகளே வாரீர்
எம் தமிழிற்காய் தலவன் பணியில் அம் மாவீரன் கனவுகள்
நிஜ்மாக அவர் கரம் பற்றி தொடர்வோம்